(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

வித்தியா கொலை வழக்கு: தடயவியல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் சாட்சியம்

மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் உடலில் இருந்து கைப்பற்றப்பட்ட சந்தேகத்திற்கிடமான இரண்டு ரோமங்களை பகுப்பாய்விற்கு அனுப்பி வைப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று வினவப்பட்டுள்ளது.
மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கின் Trial at Bar விசாரணை இன்று ஆறாவது நாளாகவும் நடைபெற்றது.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோருடன் பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் யாழ். மேல் நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெற்று வருகின்றது.
விசேட வழக்கு தொடுநரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார ரட்ணம் மற்றும் யாழ். மேல் நீதிமன்ற அரசதரப்பு சட்டத்தரணி நிஷாந்த் நாகரட்ணம் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகியுள்ளனர்.
மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் 22 ஆவது சாட்சியாளரான தடயவியல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் ரொஷான் சந்தனகுமார இன்று சாட்சியமளித்துள்ளார்.
புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் சடலம் ஒன்று இருப்பதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, மற்றுமொரு அதிகாரியுடன் அங்கு சென்றதாக சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.
அங்கு மலசலக்கூடமொன்றுக்கு அருகாமையில் சப்பாத்து கிடந்ததாகவும் பின்னால் பாழடைந்த வீடொன்று இருந்ததாகவும் அலரி மரங்களுக்கு இடையில் கருப்பு நிற பொலித்தீனால் மூடப்பட்ட மூன்று இடங்களை அவதானித்ததாகவும் அவரது சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தை தான் புகைப்படமெடுத்ததாகத் தெரிவித்த சாட்சியாளர், சட்ட வைத்திய அதிகாரியின் வருகையை அடுத்து பொலித்தீன் நீக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
சடலத்தின் இடது நெற்றியில் சிறு காயம் இருந்ததாகவும் கண்ணில் சிறு புழுக்கள் காணப்பட்டதாகவும் அவரது சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்புக்கு சற்று மேல் சந்தேகமான இரண்டு ரோமங்களை அவதானித்து அதனை புகைப்படம் எடுத்ததாகவும் பின்னர் பாதுகாப்பாக அவற்றை சேகரித்து பகுப்பாய்விற்கு அனுப்பி வைத்ததாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.
சடலம் அங்கிருந்து அகற்றப்பட்டபோது பின்பக்க இடுப்புப் பகுதியில் சிறு கீறல் காயங்களை அவதானித்ததாகவும் சாட்சியாளர் கூறியுள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து வேறு விஞ்ஞான ரீதியான தடயங்களை தம்மால் கண்டுப்பிடிக்க முடியவில்லை எனவும் தடயவியல் பொலிஸ் உத்தியோகத்தர் ரொஷான் சந்தனகுமார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 13 சான்றுப் பொருட்கள் திறந்த நீதிமன்றத்தில் பிரித்துக் காண்பிக்கப்பட்டதுடன், அவற்றை சாட்சியாளர் அடையாளம் காண்பித்துள்ளார்.
பெண்கள் அணியும் உள்ளாடைகள் போன்ற சான்றுப்பொருட்கள் காண்பிக்கப்பட்டபோது இதைப்போன்றது என அவர் அடையாளம் காண்பித்துள்ளார்.
சீல் வைக்கப்பட்ட இரண்டு பொதிகளும் இன்று மன்றின் அனுமதியுடன் திறக்கப்பட்டதுடன், அவை பகுப்பாய்விற்காக ரோமங்கள் அனுப்பி வைக்கப்பட்ட உறைகள் என சாட்சியாளர் அடையாளம் காண்பித்துள்ளார்.
சாட்சியாளரிடம் குறுக்கு விசாரணைகளை ஆரம்பித்த மூன்றாம், நான்காம், ஆறாம் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மஹேந்திர, ரோமங்கள் எப்போது பகுப்பாய்விற்கு அனுப்பிவைக்கப்பட்டன என கேள்வி எழுப்பினார்.
2015 ஜூன் மாதம் முதலாம் திகதி ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டு யாழ் தடயவியல் பிரிவினரால் அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் ரோமங்கள் ஒப்படைக்கப்பட்டதாக இதன்போது சாட்சியாளர் பதிலளித்துள்ளார்.
வழக்கின் முக்கியமான ஒரு தடயத்தை 17 நாட்களின் பின்னர் அனுப்பி வைத்தமைக்கான காரணத்தையும் சட்டத்தரணி வினவியுள்ளார்.
அந்த தினத்திலேயே இந்த வழக்கிற்கான ஆரம்ப சான்றுப்பொருள் முற்படுத்தப்பட்டது எனவும் அதனை அனுப்பி வைப்பதில் தடைகள் எதுவும் இருக்கவில்லை எனவும் சாட்சியாளரான தடயவியல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் கூறியுள்ளார்.
நுணுக்கமான கருவியைக் கொண்டு ஆய்வு செய்தபோது உடலில் இருந்தது விந்தணுவா, புழுவா, பழுதடைந்த இரத்தமா என சட்டத்தரணி சாட்சியாளரிடம் வினவியுள்ளார்.
புழுக்கள் அப்போது வளர ஆரம்பித்திருந்ததாக சாட்சியாளர் கூறியுள்ளார்.
சடலத்தின் வலது கை ஆட்காட்டி விரலை சோதனைக்குட்படுத்தியதன் பின்னர் விரல் பாதுகாப்பாக பொலித்தீனால் கட்டப்பட்டதாகவும் சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.
மாணவியின் சடலத்தில் இருந்து பெறப்பட்ட ரோமம் தொடர்பிலான ஜீன் டெக் நிறுவன அறிக்கையின் பிரதிகள் இன்று சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான அனைத்து சட்டத்தரணிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
பின்னர் 05 ஆம் இலக்க சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரகுபதி குறுக்கு விசாரணைகளை ஆரம்பித்திருந்தார்.
ரோமங்கள் தவிர வேறு ஏதேனும் சான்றுப்பொருட்கள் காணப்பட்டதா என சட்டத்தரணி வினவியபோது,
விஞ்ஞான தொழில்நுட்ப ரீதியாக நிரூபிக்கக்கூடிய வேறு எந்தப் பொருளும் கைப்பற்றப்படவில்லை என சாட்சியாளர் பதிலளித்துள்ளார்.

சந்தேகத்திற்கிடமான சான்றுகள் எதுவும் இல்லை என யாழ். பொலிஸ் நிலையத்தில் CID யினரிடம் வாக்குமூலம் அளித்தீர்களா என நான்காம், ஏழாம் மற்றும் ஒன்பதாம் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கேதீஸ்வரன் சாட்சியாளரிடம் வினவினார்.
தனது விசாரணை தொடர்பில் மாத்திரமே வாக்குமூலம் அளித்திருந்ததாக சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.
சடலத்திலும் சடலம் காணப்பட்ட சூழலிலும் பரிசோதித்து பார்த்தபோது, வேறு சான்றுப் பொருட்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் 22 ஆம் இலக்க சாட்சியாளரான தடயவியல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் கூறியுள்ளார்.
இதன்போது சான்றுப்பொருட்களை பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார ரட்ணம் சாட்சியாளரிடம் வினவினார்.
நீதிமன்றத்தில் கட்டளைகளைப் பெறும் தினம் வரையில் சான்றுப்பொருட்களை அனுப்பவில்லை என சாட்சியாளர் பதிலளித்துள்ளார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை