
காணாமல் போனோர் பணியக சட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று கையெழுத்திட்டார். இது தொடர்பாக அவர் கீச்சகப் பதிவு ஒன்றையும் இட்டிருந்தார்.
இது குறித்து தமது கீச்சகப் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள சிறிலங்காவுக்கான ஐ.நாவின் நிரந்தரப் பிரதிநிதி உனா மக்கோலி, காணாமல்போனோர் பணியக சட்டம், வர்த்தமானியில் வெளியிடப்படுவது, சிறிலங்கா மக்களுக்கான முன்நோக்கிய நகர்வின் ஒரு முக்கியமான நடவடிக்கை என்று கூறியுள்ளார்.
அதேவேளை, இதுகுறித்து தமது கீச்சகப் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், காணாமல்போனோர் பணியகச் சட்டத்தில் சிறிலங்கா அதிபர் கையெழுத்திட்டு, வர்த்தமானியில் வெளியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
பதில்களுக்காக காத்திருக்கும் குடும்பங்கள், தற்போது, காணாமல்போனோர் பணியகம் விரைவாகச் செயற்படும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே கனேடிய துதுவர் ஷெல்லி வைற்றிங் தமது கீச்சகப் பதிவில் காணாமல்போனோர் பணியக சட்டத்தில் சிறிலங்கா அதிபர் கையெழுத்திட்டுள்ளமை வரவேற்றத்தக்கது. காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு பதில்களை வழங்குவதற்கான முக்கியமான நடவடிக்கை இது என்று குறிப்பிட்டுள்ளார்.
NEWS PUBLISHED BY COLOMBO GAZETTE