
மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தல்குமாரவேலியார் கிராமம் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் துப்பாக்கி சூடு நடத்திய போது, தப்பிச் செல்ல முற்பட்ட ஒருவர் ஆற்றில் குதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தின்போது அங்கு நேரடியாக சென்ற நிலைமைகளை அவதானித்த பிரதி தவிசாளர் அது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
இன்று காலையில் இடம்பெற்ற சம்பவத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்திற்கான முழுப்பொறுப்பினையும் விசேட அதிரடிப் படையினரே ஏற்கவேண்டும்.
சட்ட விரோத மண் அகழ்வு நடைபெறுவது என்றால் அங்கு சென்று துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. அவர்களை கைது செய்திருக்க முடியும்.
அத்துடன்
மேல் நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய போது சகோதரர்கள் இருவர் நீரில்
பாய்ந்த போது அங்கிருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முற்பட்டபோது அதனை விசேட
அதிரடிப் படையினர் தடுத்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இது அவர்களின்
அடாவடித்தனத்தையே காட்டுகின்றது.குறிப்பாக இப்பகுதிகளில் மண் மாபியாக்களின் செயற்பாடுகளே இவ்வாறான நிலைக்கு காரணமாகும். அதற்காக இவ்வாறான மாபியாக்களிடம் லஞ்சங்களை வாங்கிக்கொண்டு செயற்படும் அதிகாரிகளும் காரணமாக அமைகின்றனர்.
இப்பகுதிகளில் நடைபெற்றுவரும் மண் கொள்ளைகள் தொடர்பில் பல தடவைகள் ஆராயப்பட்டும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இன்று ஒரு அப்பாவி இளைஞன் உயிரிழக்கும் நிலையேற்பட்டிருக்காது.
அப்பாவி இளைஞர்களைக் கொண்டு மண் மாபியாக்கள் இவ்வாறான சட்ட விரோத மண் அகழ்வு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது நிறுத்தப்பட வேண்டுமானால் மண் மாபியாக்களின் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என அவர் தொடர்ந்து தெரிவித்திருந்தார்.
அத்தோடு இதன்போது தனது வாகனமும் கல்வீச்சு காரணமாக சிறு சேதமடைந்துள்ளதாகவும் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
