பயங்கரவாத தடைச்சட்டத்துடன் தொடர்புடைய வழக்குகள் நீதிமன்றத்தில்
நிலுவையில் உள்ள 84 பேர் இன்னமும் சிறைச்சாலையில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பவாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மேலும் 12 பேர் மீது
சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, சட்டமா அதிபர் திணைக்களம் காவல்துறையின்
விசாரணை அறிக்கைகளை ஆராய்ந்து வருகிறது.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை, முன்னாள்
பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட
முயற்சி, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஏனைய முக்கிய
பிரமுகர்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கான முயற்சி, முன்னாள்
அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளோ படுகொலை, முன்னாள் இராணுவத் தளபதி
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மீதான படுகொலை முயற்சி, அனுராதபுரவில் மேஜர்
ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் தற்கொலை குண்டுத் தாக்குதலில்
கொல்லப்பட்டமை போன்ற சம்பவங்களுக்கு சூழ்ச்சி செய்தமை, உதவி செய்தமை,
உடந்தையாக இருந்தமை, ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளே தற்போது
விசாரணையில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
