கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்
நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திக்கு பொலிஸார் மறுப்பு
வெளியிட்டுள்ளனர்.இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து விமானம் ஒன்றை கடத்தி சென்று, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்க ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும், இது குறித்து விசாரணை மேற்கொள்ள அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்த விடயம் குறித்து எவ்விதமான தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், புலனாய்வு பிரிவினருக்கு இது குறித்த தகவல்கள் கிடைத்திருக்க கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகளை அறிந்துகொண்டதாக விமானப்படைப் பேச்சாளர் குறூப் கெப்டன் கிகான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த விடயம் தொடர்பில் எவ்வித கருத்துகளை வெளியிட முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இரத்மலானை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.