“சமையல் எரிவாயுச் சிலிண்டரின் விலை, அதிகரிக்கப்பட்டு உள்ளமையால்,
சாப்பாட்டு, பால் தேநீர் மற்றும் சிற்றுண்டி உணவு வகைகளின் விலைகள்
அதிகரிக்கும்” என்று, அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம்
தெரிவித்துள்ளது.
12.5 கிலோ கிராம் நிறைகொண்ட, காஸ் சிலிண்டரின் விலை, திங்கட்கிழமை
நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 110 ரூபாயால் அதிகரிக்கப்பட்டது.
இதனையடுத்தே, மேற்கண்ட அறிவிப்பை அச்சங்கம் விடுத்துள்ளது.
“தற்போதையை நிலைமையை பார்க்கின் போது, உணவுப்பொருட்களின் விலைகள்
அதிகரிக்கும்” என்று, அந்த சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத்
தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “காஸ் விலை அதிகரிக்கப்பட்டமை
தொடர்பில், அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் விரைவில் கூடி
ஆராயவிருக்கிறது. அதனடிப்படையில், உணவுப் பொருட்களின் விலைகள்
அதிகரிக்கும். அதனை, நுகர்வோர் அதிகார சபையின் ஊடாக செயற்படுத்துவோம்”
என்றார்.
காஸ் சிலிண்டரின் விலை, 25 ஆம் திகதி நள்ளிரவு முதல்
அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், லிட்ரோ நிறுவனம், 12.5 கிலோ கிராம்
நிறைகொண்ட உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை, கொழும்பு சந்தையில் 110
ரூபாயால் அதிகரித்துள்ளது.
இதேவேளை, போக்குவரத்து மற்றும் ஏனைய மேலதிக செலவுகளை சேர்ந்து,
கொழும்புக்கு வெளியில், காஸ் சிலிண்டரின் விலை கட்டாயமாக அதிகரிக்கும்
என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் காஸ் விலை கணிசமாக அதிகரித்துள்ளமையால், காஸ் விலையையும்
அதிகரிக்குமாறு, கடந்த டிசெம்பர் மாதம் கோரியிருந்ததாக, லிட்ரோ நிறுவனம்
சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த டிசெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், உலகச் சந்தையில், காஸ்
விலையானது 98 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அந்நிறுவனம்
சுட்டிக்காட்டியுள்ளது.
காஸ் சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில், லிட்ரோ நிறுவனத்தில்
விற்பனை பணிப்பாளர் சமிந்த எதிரிசிங்க கருத்து தெரிவிக்கையில்,
“25ஆம் திகதி நள்ளிரவுமுதல், காஸ் விலை அதிகரித்துள்ளமையால், 12.5 கிலோ
கிராம் நிறைகொண்ட காஸ் சிலிண்டரின் விலை 110 ரூபாயால்
அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகையால், அந்த சிலிண்டர் ஒன்றின் புதிய விலை,
கொழும்பு சந்தையில் 1,431 ரூபாயாகும்” என்றார்.
இதேவேளை, “2.5கிலோகிராம் மற்றும் 5 கிலோகிராம் நிறைகளை கொண்ட காஸ்
சிலிண்டர்களின் விலைகளும் அதற்கு சமாந்தர விகிதாசாரத்தில்
அதிகரிக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
