இலங்கையில் பாராளுமன்ற முறைமை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு 70 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று (03) பிற்பகல் 2.30 மணிக்கு விசேட பாராளுமன்ற அமர்வொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அமர்வில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் உரையாற்றவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் பாராளுமன்ற முறைமை நடைமுறைக்கு வந்து எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு 70 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. இதனை முன்னிட்டு இன்றைய தினம்(03) சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறுகிறது.
1948ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதி இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் 1947ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி பாராளுமன்றம் உருவாக்கப்பட்டது. அன்றையதினமே முதலாவது பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றது.
அரச பேரவையில் முதலாவது சபாநாயகராக பிரான்சிஸ் மொலமூரே தெரிவுசெய்யப்படடார். இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை பாராளுமன்றம் கடந்த எழுபது வருடங்களில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்வாங்கியுள்ளது.
1972ஆம் ஆண்டு மே மாசம் 22ஆம் திகதியுடன் இலங்கை குடியரசானது. இதன் பின்னர் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதுடன், 1978ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டது. அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆக அதிகரிக்கப்பட்டது.
1947ஆம் ஆண்டு முதல் 1982ஆம் ஆண்டு வரை பாராளுமன்றம் காலி முகத்திடலுக்கு முன்னால் அமைந்திருந்தது. அதன் பின்னர் சுமார் 35 வருடங்களாக ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டையில் பாராளுமன்றம் இயங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
THANKS FOR DAILY CEYLON
