(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

அறிவும் கல்வியுமே பிள்ளைகளுக்கு வழங்கக்கூடிய பெறுமதிமிக்க சொத்தாகும் - ஜனாதிபதி

மனித வாழ்க்கைக்கும் பணப் பெறுமதியை வழங்கும் வர்த்தக மயமான சமூகத்தில், சர்வதேச சிறுவர் தினமானது நேர்மையான சமூகமொன்றினை உருவாக்கும் பொருட்டு முயற்சிக்கும் நாளாக அமைய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பணத்திற்கு முன்னால் இன்று பிள்ளைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளதுடன், பணத்தினை தேடி அதன் பின்னால் செல்லும் சமூகத்தினை ஆன்மீக ரீதியில் ஆசுவாசப்படுத்தி பிள்ளைகளுக்கு அன்பு செலுத்தும், மனிதாபிமானத்தை மதிக்கும் சமூகத்தினைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியது காலத்தின் தேவையாகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு நகரிலுள்ள மாடி வீடுகளில் வாழும் சிறுவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் பொருட்டு 'தூய சூழல் – துணிச்சலான வாழ்க்கை' என்ற தொனிப்பொருளில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது நிகழ்வில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அறிவும் கல்வியுமே பிள்ளைகளுக்கு வழங்கக்கூடிய பெறுமதிமிக்க சொத்தாகும்;. அதனூடாக ஒழுக்கம், நற்பழக்கங்கள் மற்றும் மனிதாபிமானத்தை அவர்களிடையே கட்டியெழுப்ப முடியும் என்று சுட்டிகாட்டினார்.

பாடசாலைகள், மாணவர்களுக்கு சிறந்த அறிவையும் கல்வியையும் வழங்குவதைப் போலவே ஒழுக்கமும் நற்பண்புகளும் நிறைந்த தலைமுறையைக் கட்டியெழுப்புவதற்காக சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரும் தமது பொறுப்பினை சிறந்தவகையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு நகரினை பௌதீக ரீதியில் எத்தனையோ பேர் அழகுபடுத்தியபோதும், மக்களின் வாழ்க்கையை அழகுபடுத்துவதற்கு அவர்களால் முடியாது போய்விட்டதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இவ்வாறான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதனூடாக சிறுவர்களின் வாழ்க்கையில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றும் குறிப்பிடடார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண உள்ளிட்ட கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை