உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீள நிகழாமையை
உறுதிப்படுத்தல் தொடர்பாக ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப்
எதிர்வரும் 10 ஆம் திகதி இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இவர்
எதிர்வரும், 23 ஆம் திகதி வரை இலங்கையில் அதிகாரபூர்வ பயணமாக
தங்கியிருப்பார் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் அறிவித்துள்ளது.
இலங்கையில் இதுவரை இடம்பெற்றுள்ள முன்னேற்றங்கள் குறித்து மீளாய்வு
செய்வதும், நிலைமாறுகால நீதி மற்றும் மறுசீரமைப்பு செயல்முறைகளை
நடைமுறைப்படுத்துவதில் உள்ள தடைகள் மற்றும் சிக்கல்களை அடையாளம் காண்பதும்,
இதனைச் சமாளிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அரசாங்கம் மற்றும் சிவில்
சமூகத்துடன் கலந்துரையாடுவதுமே தமது பயணத்தின் நோக்கம் என்று ஐ.நா சிறப்பு
அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, மத்திய மற்றும் மாகாண மட்டத்திலான அரசாங்க
அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதித்துறை உறுப்பினர்கள்,
ஆயுதப்படைகள், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், சமயத் தலைவர்கள்,
அரசியல் கட்சிகள், மனித உரிமைகள் ஆணையம், சிவில் சமூகம், பாதிக்கப்பட்ட
குழுக்கள், கல்வியாளர்கள், அனைத்துலக சமூகப் பிரதிநிதிகளை அவர்
சந்திக்கவுள்ளார்.
இவர் தெற்கு, மத்திய, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கும் பயணம்
மேற்கொள்ளவுள்ளார். இவர் தனது பயணம் தொடர்பான அறிக்கையை 2018ஆம்
செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பார்.
