பயங்கரவாத
தடுப்பு சட்டத்தின் கீழ் தமிழ் மக்கள் மாத்திரமன்றி சிங்கள மக்களும் கைது
செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் சாகல ரத்யனாக்க தெரிவிப்பு.
பயங்கரவாத
தடுப்பு சட்டத்தின் கீழ் தமிழ் மக்கள் மாத்திரமன்றி சிங்கள மக்களும் கைது
செய்யப்பட்டிருப்பதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்
சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில்
நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்திற்கு
பதிலளித்து பேசும் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பி;ட்டார்.
2015ம்
ஆண்டு ஜனவரி 8ம் திகதி வரை இந்த சட்டத்தின் கீழ் 106 பேர் கைது
செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் தற்போது 74 பேர் மாத்திரமே தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர். 40 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள அதேவேளை 25
பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாகல ரத்னாயக்க கூறினார்.
பயங்கரவாத
தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு
பிரதேசங்களை சேர்ந்தவர்களை காலம் தாழ்த்தாமல் விடுவிக்குமாறு கோரி
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்திருந்த சபை ஒத்திவைப்பு
பிரேரணைக்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கா பதிலளித்தார்.
20
நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல்
கைதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணையை அவர்களின் கோரிக்கைக்கு அமைய வவுனியா
மேல் நீதிமன்றத்தில் நடத்தாமல் சிங்கள மொழியில் வழக்கை விசாரிக்கும் ஒரு
நீதிமன்றத்திற்கு மாற்றுவதன் மூலம் அவர்களின் அடிப்படை உரிமைகள்
மீறப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித தலைவர் அந்த பிரேரணையில்;
குறிப்பிட்டிருந்தார்.
நீதியமைச்சர்
வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள
பேச்சுக்களின்போது கைதிகளின் வழக்கு விசாரணை தொடர்பான சட்டப் பிரச்சினை
குறித்து விபரிப்பார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சர்
சாகல ரத்னாயக்க தொடர்ந்து உரையாற்றுகையில் தேசிய பாதுகாப்பை
உறுதிப்படுத்தும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அடுத்த வருட ஆரம்பத்தில்
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். மக்களை பயங்கரவாத அழுத்தங்களில்
இருந்து பாதுகாக்க வேண்டும். நாட்டு மக்களுக்காகவே இந்தச் சட்டம்
கொண்டுவரப்படுகின்றது. என்று மேலும் தெரிவித்தார்.
