இலங்கையில் நடைபெறவுள்ள அடுத்த ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்மசிங்கவை ஐக்கிய தேசிய கட்சி முன்னிறுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது என இந்திய இணைய தகவல் தெரிவித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் 2ஆவது முறையாக போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கவில்லை என்று அந்நாட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இலங்கை ஜனாதிபதி சிறிசேனவின் பதவிக்காலம் வரும் 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இதற்கான தேர்தல் அறிவிப்பு வரும் 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிச்சயம் அறிவிக்கப்பட வேண்டும்.
இந்நிலையில், வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களுக்கான பிரசாரத்தில், கூட்டணிக் கட்சியான ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியை சிறிசேன கடுமையாக விமர்சித்து வருகிறார்.
நாட்டில் நிலவும் ஊழலுக்கு ஐக்கிய தேசிய கட்சிதான் காரணம் என்று அவர் வெளிப்படையாக குற்றம்சாட்டி வருகிறார். இதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சிறிசேனவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதேபோல், சிறிசேனவுக்கு முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்சவும் தீவிர எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். உள்ளாட்சித் தேர்தலில் ராஜபக்சவின் புதிய கட்சி, சிறிசேன கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில், ராஜபக்சவுக்கும், சிறிசேனவுக்கும் இடையே போட்டி நிலவியது. இதில் சிறிசேனவுக்கு ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளித்தது.
இத்தேர்தலில் சிறிசேன வெற்றி பெற்றதும், கட்சித் தலைமையை அவரிடம் ராஜபக்ச அளித்து விட்டார். இருப்பினும், சிறிசேன தொடர்ந்து 2-ஆவது முறையாக பதவி வகிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உடன்பாடு இல்லை, இதனால் சிறிசேனவுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவளிக்காது என கூறப்படுகிறது.
இத்தேர்தலில், ஜனாதிபதி பதவி வேட்பாளராக ரணில் விக்மசிங்கவை ஐக்கிய தேசிய கட்சி முன்னிறுத்தலாம் எனவும் தெரிகிறது.
