க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் நேற்று (19) நடைபெற்ற இரசாயனவியல் பகுதி 2
இற்கான வினாப் பத்திரத்தில் வந்திருந்த 3 வினாக்கள் பரீட்சைக்கு முன்னர்
ஏற்கனவே வெளியிடப்பட்டவை என மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பரீட்சை ஆரம்பிக்க முன்னர் பிரத்தியேக வகுப்பு நடாத்தும் தனியார்
நிறுவனமொன்றினால் வழங்கப்பட்ட மாதிரி வினா விடைப் பத்திரத்தில் காணப்பட்ட
அதே வகையான 3 வினாக்கள் நேற்றைய உயர் தரப் பரீட்சை வினாப் பத்திரத்திலும்
காணப்பட்டதாக மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மாதிரி வினா விடைத் தாளில் அடுத்த வருடம் கம்பஹாவில் உயர் தரத்திற்கான
புதிய வகுப்புக்கள் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும்
அம்மாணவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்துத் தெரிவிக்கையில்,
பிரத்தியேக வகுப்புக்களிடையே காணப்படும் போட்டித் தன்மையின் ஒரு
வெளிப்பாடே இந்த சம்பவம் எனக் கூறியுள்ளார். இது போன்ற சம்பவங்களினால்,
மாணவர்களின் மனோ நிலை பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக
தேசிய சிங்கள சகோதர ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
