சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான கூட்டு அரசாங்கம்
தோல்வியடைந்து விட்டது என்று தெரிவித்துள்ள சிறிலங்காவின் நீதி மற்றும்
பௌத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, அரசியல் மாற்றத்துக்காக பரப்புரைக்கு
பௌத்த பிக்குகள் தலைமை தாங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரம்பேவ பகுதியில் நேற்று நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,
“அமைச்சரவை சகாவான ராஜித சேனாரத்ன, சிறுநீரக மற்றும் டெங்கு நோய்கள்
பரவி வருவது பற்றிக் கவலைப்படவில்லை. அடுத்தவர் விவகாரங்களில் மூக்கை
நுழைக்கிறார்.
நாட்டில் எவருக்கு வேண்டுமானாலும், சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்,
எவராவது டெங்கினால் மரணிக்கலாம் என்ற நிலை இருக்கும் போது, எமது சுகாதார
அமைச்சரோ, சட்டமா அதிபர் திணைக்களம் பற்றியும், நீதித்துறை குறித்துமே
அதிகம் கவலைப்படுகிறார்.
நாட்டைப் பற்றி கவலைப்படாத தலைவர்களைக் கொண்டிருப்பதால், நாடு அழிந்து விட்டது.
ஐதேகவையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் இணைத்து கூட்டு அரசு
ஒன்றை அமைக்க நாங்கள் முயற்சித்தோம். அதுவும் கூட தவறானது என்று நிருபணமாகி
விட்டது.
மாற்று அரசியல் தலைமைத்துவம் ஒன்று பற்றி பௌத்த மதத் தலைவர்களும்,
ஏனையவர்களும் முடிவு செய்ய வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
