மியன்மார் அகதிகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (02) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பௌத்த பிக்குகள் சிலரின் அச்சுறுத்தலுக்குள்ளான 31 மியன்மார் பிரஜைகள் தற்பொழுது தங்கவைக்கப்பட்டுள்ள பூஸ்ஸ இராணுவ மத்திய நிலையம் போதிய அடிப்படை வசதிகள் இல்லாது காணப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த 29 ஆம் திகதி அரசாங்கத்திற்கு அறிக்கை விடுத்திருந்தது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைப் பணிப்பாளர் உட்பட பலர் கடந்த 28 ஆம் திகதி பூஸ்ஸ இராணுவ மத்திய நிலையத்துக்கு சென்று மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் பின்ன இந்த தகவலை ஆணைக்குழு வெளியிட்டிருந்தது.
குறித்த இடம் தங்கவைப்பதற்கான வசதிகள் அற்ற நிலையில் காணப்படுவதாகவும், உடன் அந்த இடத்திலிருந்து மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஆணைக்குழு அதிகாரிகளைக் கேட்டிருந்தது.
இது குறித்து ஆராய்வதற்கே இன்று விசேட கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
