ஊடகவியலாளரை அச்சுறுத்தி தகாத வார்த்தைப் பிரயோகங்களால் அவமானப்படுத்திய குற்றத்திற்காக காலி – அம்பலாங்கொடை பிரதேச சபை முன்னாள் தலைவர் கீம்பியகே புஷ்பலால் குமாரசிங்க மற்றும் அவரது சகோதரியான லிசீ குமாரசிங்க ஆகியோருக்கு 6 மாதகால கடுமையான வேலைகளுடனான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹிக்கடுவ பொலிஸாரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத கூட்டமொன்றில் பங்கேற்றமை, ஊடகவியலாளரது கடமையை செய்ய இடையூறு விளைவித்தமை, அவரை தகாத வார்த்தைகளால் அவமானப்படுத்தியமை மற்றும் பலாத்காரமாக ஊடகவியலாளரை தடுத்து வைத்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த வழக்கில் சந்தேக நபராக ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த அமில பிரசன்ன குற்றச்சாட்டுக்களில் இருந்து நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜுலை மாதம் 12ஆம் திகதி ஜனத் சில்வா என்ற ஊடகவியலாளர், தமது வாக்குமூலத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது இடைமறித்த பிரதேச சபை முன்னாள் தலைவர், தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறியிருக்கின்றார்.
மேலும் தன்னை தாக்குவதற்கும் இதன்போது முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் குறித்த ஊடகவியலாளர் மன்றில் சாட்சியமளித்திருக்கின்றார்.
இந்த வழக்கில் மூன்றாவது சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபா மற்றும் ஒரு இலட்சம் ரூபா படியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம், மீண்டும் அவர்கள் காலி மேல்நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.
