93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பை நாளை
மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரிகள் வெளியிடுவர் என்று சிறிலங்கா தேர்தல்
ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான நளின் அபேசேகர, பேராசிரியர்
ரத்னஜீவன் ஹுல் ஆகியோருடன் நேற்று நடத்திய முக்கிய கூட்டத்தின் பின்னரே
அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
உள்ளூராட்சி சபைகளின எல்லைகள் தொடர்பாக அமைச்சர் பைசர் முஸ்தபா
வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்புக்கு மேல்முறையீட்டு நீதமன்றம் இடைக்காலத்
தடை விதித்துள்ளதையடுத்து, உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதில்
ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து நேற்று இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ள
வழக்கு முடிந்த பின்னர் அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரே நேரத்தில்
தேர்தலை நடத்துவதா அல்லது வர்த்தமானி அறிவிப்பு மீதான இடைக்காலத் தடையினால்
பாதிக்கப்படாத உள்ளூராட்சி சபைகளுக்கு முதலில் தேர்தலை நடத்துவதா என்று
இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவு, மொத்தமுள்ள 336
உள்ளூராட்சிசபைகளில் 203 சபைகளுக்கு மாத்திரம் பொருத்தமானது. எனவே 133
உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல்களை நடத்துவதற்கு தடையில்லை.
இதில் 40 உள்ளூராட்சி சபைகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பில்
எழுத்துப்பிழைகள் உள்ளன. இந்த தவறுகளை திருத்தினால், அங்கு தேர்தல்களை
நடத்த முடியும்.
