தேசிய கரிசனை சார்ந்த ஒரு தேர்தலையே நாம் எதிர்நோக்கியுள்ளோம் எனவும்
தென்னிலங்கையில் யார் இந்த நாட்டின் தலைவர் என்று இந்த உள்ளூராட்சி சபை
தேர்தல் நிர்ணயிக்கும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற
உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய
கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு தெளிவூட்டும் கருத்தரங்கு நேற்று
யாழ்.நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைக்
கூறியுள்ளார்.
இந்த தேர்தல் அந்தளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. எமது அரசியல்
போக்கில், எமது அரசியல் தீர்வு சம்பந்தப்பட்ட விடயங்களில், தென்னிலங்கையில்
பாரிய ஆட்சி மாற்றத்தினை உருவாக்கியவர்கள் என்றவகையில் நாங்கள், இந்த
தேர்தலில் கரிசனை கொள்ள வேண்டிய சமயம் இதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாரைத் துரத்தி அடித்தோமோ, அவர் மீண்டும் வந்துவிடுவாரோ, வருவதற்கு
இந்ததேர்தல் படிக்கற்களாக அமைந்துவிடுமோ என்பதனால், இதில் நாங்கள் கரிசனை
கொள்ள வேண்டும் எனவும் வேட்பாளர்களைக் கேட்டுள்ளார்.
