கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபைக் காலத்தில் மட்டக்களப்பு மத்திய
பேருந்து பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுவப்பட்ட மணிக்கூடு, கடந்த சுமார்
மூன்று வருட காலமாக ஓடாமல் ஒரே நேரத்தையே காட்டி வருகிறது.
பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பலரும் மட்டக்களப்பு மத்திய
பேருந்து நிலையம் வழியாகவே தமது போக்குவரத்து நடவடிக்கைகளை
மேற்கொள்கின்றனர்.
இதன்போது, சிலவேளைகளில் ஓடாத இந்த மணிக்கூட்டைப்
பார்த்து நேரத்தைக் கணக்கிட்டுக்கொள்வதாகவும், இதனால் அவர்கள் சில
சங்கடங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கின் பிரதான நகராக விளங்கும் மட்டக்களப்பின் பேருந்து நிலையத்தில்
உள்ள இந்தப் பிரச்சினையை அப்பகுதி அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கடந்த
மூன்று வருடங்களாக அடையாளம் கண்டுகொள்ளவில்லையே என்று மக்கள் அதிருப்தி
தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி விசனம் தெரிவித்த ஒருவர், ‘இந்த சாதாரண பிரச்சினையையே
தீர்த்துவைப்பதில் அக்கறை காட்டாத அரசியல்வாதிகள், மக்களின் ஏனைய
பிரச்சினைகளில் ஆர்வம் காட்டுவார்கள் என எப்படி நம்புவது?’ என்று
கேள்வியெழுப்பினார்.
